search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் சிறுமி பலாத்காரம்"

    திருப்பூரில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் போயம்பாளையத்தில் குடியிருந்து வரும் தம்பதியினர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பனியன் ஆர்டர் அதிகமாக இருந்ததால் கணவன் -மனைவி இரவு வேலைக்கு சென்று விட்டனர்.

    நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் சிறுமியின் தந்தை மட்டும் பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது இரு மகள்களும் தூங்கி கொண்டிருந்தனர்.

    அதிகாலை 2 மணிக்கு மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் வீட்டு கதவை லேசாக திறந்து வைத்து விட்டு தந்தை தூங்க சென்றார். அதிகாலை 3 மணிக்கு 2-வது மாடியில் இருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மாடிக்கு சென்று பார்த்த போது 4 வயது குழந்தை அழுது கொண்டிருந்தது. சிறுமியின் ஆடை கலைந்திருந்தது.

    கை, கால் மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருந்தது. வீடு புகுந்த மர்ம நபர்கள் சிறுமியின் வாயை பொத்தி மாடிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிறுமிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருப்பூர் போயம்பாளையம் பஸ் நிறுத்தம் நால் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் சமரசம் அடையவில்லை. தொடர்ந்து மறியல் செய்தனர்.

    அங்கு பதட்டம் நீடித்ததால் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகர துணை கமி‌ஷனர் உமா, உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சிறுமியை பலாத்காரம் செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் இரவு 10.30 மணிக்குதான் முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 வட மாநில வாலிபர்கள் உள்பட 3 பேரிடம் அனுப்பர்பாளையம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை நடத்தினார்கள். சிறுமி என்பதால் அவரால் சரியான முறையில் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    4 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×